home பரிணாமம் உண்மை சொல்லும் வாய்மொழி வரலாறு..

உண்மை சொல்லும் வாய்மொழி வரலாறு..

பாகம்பிரியாள்

இராமநாதபுரம் ராஜா கிழவன் சேதுபதிக்கு சிவகங்கை மன்னர் அன்பின் மிகுதியால் கொடுத்த கோவில் தான் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடனை தாலுகாவில் திருவொற்றியூர் பகுதியில் இருக்கும் பாகம்பிரியாள் ஆலயம். மாவலிச் சக்கரவர்த்தி வந்துபோனதாக வேதம் போதிப்போர் வெட்டியாய்ப் பேசினாலும் வில்வமரங்கள் நிறைந்த இந்தக் கோவில் ஓர் சிவத்தலம் அதாவது தென்னாடுடைய சிவனே போற்றி என சிவகங்கை சமஸ்தானம் வணங்கிய கோவில்.

சேதுபதி மன்னனுக்கு

மொய் செஞ்ச சிவகங்கை

கோயிலையேப் பரிசாக

கொடுத்து வந்த மன்னவரு

செம்மண் பூமி தந்த சிவகங்கை வல்லவரு

என்று வாய்மொழிப் பாட்டு ஒன்றை சீதனமாய் கோயிலையே கொடுத்தகதை சொல்கிறது.

ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த பாகம்பிரியாள் ஏழ்மை பிறந்த வீட்டில் தவழ்ந்தவள். மூன்று தம்பிகளோடும் ஒரே ஒரு அண்ணணோடும் தாய் தந்தை இல்லாமல் தனக்கு பத்து வயது இருக்கும்போது குடும்பம் காக்க புறப்பட்டாள். ஒருபுடிச் சோறென்றாலும் சரியாய்ப்பிரிப்பவள். மூன்று தம்பிகளையும் தன்னையும் தனியாக விட்டுவிட்டுபினாங்கு சென்றஅண்ணனை மதித்து வாழ்ந்தவள் தன் அம்மா அப்பா விட்டுச் சென்ற நிலபுலன் வீடுகளை சரியாய் பிரித்து தன் தம்பிகளுக்கும் அண்ணணுக்கும் தந்தவள்.

பினாங்கு அண்ணணுக்கு தந்த பங்கை தனதாக்க நினைத்த தம்ப்களை தண்டித்தவள். ஊரில் உள்ளோர் மதிப்பை பெற்றவள். பல பஞ்சங்களில் இருந்து வெற்றியூரைக் காத்தவள்.

கண்மா தண்ணிலத்தான்

கச்சிதமா ஈவுவச்சு

எல்லாரும் பயிர்வளர்க்க

வேலியாக நின்னமகள்

இந்த வழிநடைப் பாட்டு எதையும் சரியாகப் பிரித்து எல்லோரும் நலமாய் வாழ நல்வழி காட்டுபவள் இந்த சமத்துவ மங்கை பாகம்பிரியாள்.

பொறந்தது இழிகுலமா

பொன்மனசோ உயர்குலமா

தீண்டா சாதி இவா

தீர்துவைப்பா பெரியபகை

இப்படி சாதி கிடக்கும் ஊரில்லை சரிநிலை சமாதானம் பேசியவள் பிரியாள்.

ஏடுபடித்ததில்லை

ஏய்த்துவாழ மனமில்லை

இருப்பதை ஒழுங்குபன்னி

எடுத்துவைப்பா கன்னியம்மா

இப்படி புகழ்ந்துபாடி ஊர் அடிக்கும் உலைக் கும்மி திருவாடனை முழுதும் முளைப்பாரி எடுத்து சுற்றிவந்து குனிந்து கொட்டும் பாகம்பிரியாள் பற்றிய கும்மிப் பாடல் இது. இப்படி ஊர்மெச்ச வாழ்ந்தமகள் உடன்பிறந்த தம்பிகளால் விசம்வைத்துக் கொல்லப்பட்டாள்.

கூடப் பொறந்த கொடி

கழுத்த நெரிச்சதடி

ஆசைவேசம் போட்டதடி

ஆரணங்க அலைச்சதடி

கருமருந்த விசம் வச்சு

குலவாழை அறுத்ததடி

சரியா பிர்ச்சுத்தான்

சண்டாளி கொடுத்திருந்தா

பிணந்தின்னும் பாம்புக்கு

பால் ஊத்தி வளத்திருக்கா

ஊராண்ட பொம்பளைய

உடன்பிறந்து காவுகொண்டான்.”

பாகம்பிரியாளைசொந்த தம்பிகள் சொத்துக்கு ஆசைப்பட்டு கொன்ற கதையை  கொடுகட்டி கூத்தாக பாடி வந்த கதை இது

பாகம்பிரியாளை ஊர் மக்கள் அவள் பிறந்த வீட்டு மண்ணெடுத்து ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் பச்சரிசி கொழுக்கட்டை அவித்து உப்பிப் போடாமல் சாப்பிட்டு நிர்வாணமாய் கும்மி அடித்து அவளின் உருவத்தை கொழுக்கட்டை மாவில் வடித்து…. ஆண்கள் கண்களில் படாமல் பூஜை செய்வார்கள். அதற்குக் காரணம் திருவொற்றியூர் சிவதலத்திற்கு சொந்தமான கோவில் நிலங்களை உழுது பயிரிட்டு அதில் விளைந்த நெல்லை அரிசியாய் பங்கு போட்டு உழைக்கும் மக்களுக்கு தந்துவிட்டு அதில் ஒரு பங்கை சிவதலத்தில் தங்கி இருக்கும் ஆண்டிகளுக்கு அன்னமிட வழிவகுத்தவள் பாகம்பிரியாள்.

ஒலக்கரிசி கிடச்சாலே

ஊருக்கெல்லாம் படியளந்தா

மடி பூக்கம்பி கெடச்சாலே

கொடிக்கம்பி மனசு வச்சு

நொடிக்குள்ளே பிரிச்சுடுவா

கோயில் நெலமெல்லாம்

கூடி நின்று விதவெதச்சு

குலுமை நிறையவச்சு

கொண்டு வந்தா மகராசி

அளந்த மிச்சமெல்லாம்

ஆண்டவனின் காலடியில்

தஞ்சமிடும் அடியார்க்கு

இப்படி ஆண்டிப்பண்டாரங்கள் பாடிய பதிகம் பல கோவில் சுற்றி பாடலாக கிடக்கிறது. இந்த ஊரளந்த மகராசி தெருத்தெருவா படியளந்ததாள் வீட்டுக்குள்ளே தெய்வமாக எல்லோரும் வணங்கினார்கள். இந்த வெற்றியூர் மகளை வெளியூர்ல உள்ளவங்க எல்லாம் பொங்கல் வச்சு கும்பிட்டாங்க. சிவதலத்துல ஆள் கூடல ஆனா ஊருக்குள்ள பொதுமேடை கட்டி பாகம்பியாள் உருவத்த மண்ணால செஞ்சு வழிபாடு நடந்தது. இந்த நடுகல் தெய்வத்த எட்டூரு சனமும் வந்து எடுத்துவச்சு வணங்குச்சு. முச்சந்திக்கு ஒரு பீடம் கட்டி பெண்டு புள்ளைக கும்பிட்டுச்சு உடனே சிவதலத்துல இருந்த பிராமிணர்கள் பாகம்பிரியாள ஆகம விதிகளின்படி கோவிலுக்குள்ள கொண்டுபோய் வச்சு பூஜை செஞ்சாங்க. ஒரு ஒடுக்கப்பட்ட பெண்ணை ஊறே சாதி மறந்து தெய்வமா வணங்குது இப்பவும்.

முச்சந்தி மகளே பிரியா

சக்தி தந்தாள் சரியா

சாதி கடந்த பக்தி

சேதி தருது முக்தி

இப்படி ஜனங்களின் தெய்வமாய் இந்த பூமகள் பாகம்பிரியாள் புண்ணியவதியாய் சாதி கடந்து பேசுகிறாள்….தெய்வமாய்

அடுத்த இதழில் கூத்தாடி பெரியநாயகி……

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply