home நிகழ்வாழ்வு தமிழகத்தை அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் !

தமிழகத்தை அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் !

தமிழ்நாட்டில் பருவ மழை பொய்த்து போனது, இதனால் விவசாயிகள் தர்கொலை செய்து கொண்டது, தற்போது நிலத்தடி நீர் மட்டம் வற்றி போனது, போதாதற்கு கேரளா மற்றும் கர்நாடகா அரசு தங்கள் பகுதிகளில் அணையைக் கட்டி தமிழகத்து வர வேண்டிய அல்லது கிடைக்க வேண்டிய நீர் வளத்தை தடுத்து கொண்டிருப்பதால் நொந்து போயிருக்கும் நம்மூர் விவசாயி களுக்கு இன்னுமொரு பிரச்னை உருவாகி இருக்கிறது. அதாவது புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு (ஹைட்ரோ கார்பன்) எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க… இத்திட்டம் விவசாயத்தை கடுமையாக பாதிக்கும் எனச் சொல்லி போராடத் தொடங்கி இருக்கிறார்கள் விவசாயிகள்.

அதாவது டெல்டா மாவட்டங்களில் கைவிடப்பட்ட மீத்தேன் திட்டத்தையே ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் செயல்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மீத்தேன் வாயுக்களின் பொதுப் பெயரே ஹைட்ரோ கார்பன். ஹைட்ரோ கார்பன் திட்டம் என்பது அதன் வகைகளான மீதேன், ஈதேன், ப்ரோபேன், பியூட்டேன் எனும் அனைத்து வாயுக்களின் கலவைதான். இவற்றை ஷேல் காஸ், டைட் காஸ் என்றும் பிரிக்கலாம் எனவும் கூறுகின்றனர்.நிலத்தில் இருந்து இயற்கை எரிவாயுவை எடுப்பது சுற்றுசூழலுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். நிலத்தடி நீர் வளம் குறையும் என்பதும் இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்களின் குற்றச்சாட்டு. எரிவாயுவை எடுப்பதற்கு செங்குத்தாகவும், படுக்கைவசமாகவும் 1000, 5000 மீட்டர் துளைகள் அமைக்கப்பட்டு நிலத்தடி நீர் வெளியே உறிஞ்சப்படும் என்கிறார்கள் அவர்கள். இதுபோன்ற திட்டங்கள் பொதுவாக கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் செயல்படுத்தப்படும். அம்மாதிரி செயல்படுத்தப்படும் போது, நிலத்தடியில் உள்ள நீர் வளம் குறையும் என்ற பிரச்சனை எழுவதில்லை. ஆனால் தற்போது விவசாயப் பகுதியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதுதான் எதிர்ப்புக்குக் காரணம்.

இத்தனைக்கும்இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கும் நெடுவாசல் தஞ்சாவூர் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள இப்பகுதி நல்ல மண்வளம் நிறைந்த பகுதியாகும். நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பணப்பயிர்களுக்கும் ஏற்ற நிலமாக உள்ளது. இங்கு கடந்த ஆண்டு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் இப்பகுதியல் எரிவாயு சோதனைக்காக இரண்டு விவசாயிகளின் நிலத்தை கையகப் படுத்தி சுமார் 4 ஆயிரம் அடி ஆழத்துக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்தது. அப்போது கிராம மக்கள் திரண்டு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து எரிவாயு சோதனை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.இதற்காக மேலும் சிலரின் இடங்களைகையகப்படுத்த முயன்றபோதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து சம்மதிக்க மறுத்தனர். இந்நிலையில்தான் நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில்இயற்கை எரிவாயு எடுப்பதற்கு ஒப்புதல் அளித்து மத்திய அரசின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நெடுவாசல் பகுதி விவசாயிகளிடம் எவ்வித கருத்துக்கேட்புக் கூட்டமும் நடத்தப்படவில்லை.

விவசாயிகளின் கருத்துக்களை கேட்காமலும், திட்டம் குறித்து எந்தவித விளக்கமும் அளிக்கா மலும் மத்திய அமைச்சரவை இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதை எதிர்த்து ஆர்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம் போன்ற போராட்டங்களை முன்னெடுக்கத்துவங்கி இருக்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் சட்டை செய்யாமல் நெடுவாசலைத் தொடர்ந்து காரைக்காலிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply