home களம் உண்மை சொல்லும் வாய்மொழி வரலாறு!

உண்மை சொல்லும் வாய்மொழி வரலாறு!

கண்ணாத்தாள்

நாட்டரசன் கோட்டையில் கை தேர்ந்த கண்வைத்தியர் மகள் கண்ணாத்தாள் அப்பாவின் விசம் தீண்டிய  மரணத்தின் பின் அவரின் வைத்தியத்தை தன் 17 வயதில் கைவசமாக்கிக் கொண்டவள் அவள்.

அப்பாவின் கண்மலரை

காணிக்கையாக்கிவிட்டு

ஊர்க்கண் திறக்க

பச்சிலைச் சாறு

கண்ணாத்தா ஊத்தி வந்தா…

தெய்வமாக்கப்பட்ட கண்ணாத்தாள் ஊர்சுற்றி பூப்பல்லாக்கில் வரும் போது பாடப்படும் வர்ணணைப் பாடல் இது.

தோகைப் பூமயில் உலவும் கோட்டையில் மாலைப் பூவாய் இருந்தவள் கண்ணாத்தாள். இது கண்ணாத்தாள் சபை அலங்காரப் பதிகம். கண்ணின் சிகிச்சைக்கு கண்டர மாணிக்கம் வரை நடந்தே போய் பச்சிலை பறித்து வந்து கண்நோய் தீர்க்க கனகச்சித்த வைத்தியம் தருவாள். இன்றும் அவளின் திருக்கோவில் முன்பு விற்கப்படும் கண்மலரை வாங்கி காணிக்கை செலுத்தினால் விழிவலி தீரும் என்பது சிவகங்கை மண்ணின் வட்டார மக்களின் வழக்கமான நம்பிக்கை.

கன்னியவள் கைப்பிடிக்க

அரண்மனைச் சிறாவயல்

கோட்டைமுத்து கூட வந்தான்

நாச்சியார் கூடத்தில்

தீவெட்டி கொளுத்துகின்ற

பணியாளாய் வேலை செய்தான்.

சிவகங்கை கருப்பையா சேர்வையின் கதைப்பாடல் கண்ணாத்தாள் யாரைத் திருமணம் செய்து கொண்டிருந்தாள் என்பதனை உள்ளடக்கமாய்த் தருகிறது.

பூ புழு எல்லாம்

புவியாண்ட ராணியத்தான்

தூக்கி வச்சு கொண்டாடும்

குயிலி வெட்டுடையாள்

கண்ணுடைய கண்ணாத்தாள்

வேலுநாச்சி கூடப்பொறந்தவுக

ஊர்தானே பொங்கிச் சொல்லும்

குயிலி, வெட்டுடையாள், கண்ணாத்தாள் மூவரும் சிவகங்கை ராணி வேலுநாச்சியாரின் உடன் பிறந்தவளாய் பார்க்கப் பட்டு இருகிறார்கள் என்பதனை அடிகளார் மடத்தில் வாழ்ந்த திருஞானத்தின் வீரமங்கை வரலாறு என்கிற நூல் சொல்கிறது.

கோட்டை முத்து என்பவனை மணம்முடித்து வாழ்ந்தவள் கண்ணாத்தாள். அரண்மனைப் பணியாளாய் வாழ்ந்த கோட்டை முத்துவை தன்னுடைய கையாளாய் மாற்றிக் கொண்டது. வெள்ளை அரசாங்கம். வணிகம் செய்ய வந்தோர் நம்மில் பலபேரின் மனங்களை விலைபேசியது ஊரெங்கும் கொட்டிக்கிடக்கிறது..

நாட்டரசன் கோட்டை செட்டி

கோட்டை காத்த அகமுடையார்

கானாடு காத்தனும்

கண்டுபட்டி சேவுகனும்

ஆங்கிலக் கைக்குள்ளே

ஆள்காட்டியானார்கள்.

கண்ணாத்தாள் கணவன் ஆங்கிலேய கூட்டுக்குள் பல்லிழித்துக் கிடந்தான். கோட்டைகுள் தீவட்டி ஏற்றிய  வேலையோடு ராணி செல்லும் இடங்களை பரங்கியர்களுக்குச் சொல்லி வந்தான். அதற்கு வெள்ளைக்காரன் தரும் அணிகலன்களை கண்ணாத்தாளுக்கு கொடுத்தான்.

ஏதிந்த நகை என்று

கண்மனியும் கேட்க

பறக்க முழித்த அவன்

பொல்லாங்கு செய்து வந்தான்

பொன்மலர் பதம் போகும்

போக்கிடம் எல்லாமே

வெள்ளை நரிகளுக்கு

வேவு பாத்து சொல்லி வந்தான்

கருப்பூர் தேசிகனின் இந்தப் பாடல் இது.தன் கழுத்தில் கணவன் சூட்டிய நகைகள் கண்ணாத்தாளை உறுத்தி கொண்டே இருந்தது. இரத்தம் சுண்டிய உடம்பாய் அவள் மேனி கிடந்தது.

ஒருநாள்

கல்வெறி தலைக்கேறி

காமாடு தலைமாடாய்

புரண்டான் புரட்டுக்காரன்

நாச்சியாரை காட்டிக்கொடுத்த

சேதியையும் உலறி வைத்தான்

சுதாரித்த குலமகளோ

கொற்றவையாய் கொதித்துவிட்டாள்

கண்ணாத்தாள் வதம் எழுதிய பரணிநாதன் இப்படி முடிக்கிறார்.

கணவனின் இந்த கொலை பாதகச் செயலை உணர்ந்தவள். வீரக்கட்டாரி கொண்டு தன் தாலி அறுத்தாள். இரத்தக் கறையோடு, கட்டாரி தூக்கி அரண்மனை சலவைத் தொழிலாளி உதவியோடு நாச்சியாரின் உடுப்புக்களைப் போட்டுக் கொண்டு நாச்சியாராய் போய் நின்றாள்.அமராவதி புதூர் அடர்ந்த காட்டுக்குள் நாச்சியார் என நினைத்து கண்ணாத்தாளை வெட்டிச் சாய்த்தன வெள்ளைக் கழுகுகள்

வண்ணான் துணியெடுத்து

வாசமலர் பூமுடித்து

வெள்ளைக் குதிரையேறி

கண்ணாத்தா பறந்துபோனா

பரங்கியர் கைக்குள்ளே

சிக்குண்ட பூவானாள்

வெட்டிக் கூறுபோட்டு

வெள்ளாட்டக் கறியாகி

கழுகு தின்று போட்ட

மிச்சமானா கண்ணாத்தா…

இப்படி நம் வாய்மொழி வரலாறு வரைகிறது.

கண்ணாத்தாள் உயிர்க்கதையை ஓவியமாய் …….

அடுத்து வருபவள் அழகு மங்கை பாகம்பிரியான்.

 

 

 

 

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply