home சமீபத்திய பதிவுகள் நூற்றாண்டில் ஹைக்கூ பறவைகள்…

நூற்றாண்டில் ஹைக்கூ பறவைகள்…

மு.முருகேஷ்:
பூமியின் வயதென்ன..? யாராலும் இன்னும் சரியான பதிலைக் கண்டடைய முடியாத சிக்கலான கேள்வியிது. பல்வேறு வகை ஆராய்ச்சிகளின் மூலமாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பூமியின் வயதை இன்னமும் கணித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
பூமி தோன்றி கிட்டத்தட்ட 450 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன என்கின்றனர் ஒரு சாரர். ‘இல்லை… இல்லை… 500 கோடி ஆண்டுகளுக்கும் அதிகம்…’ என்கின்றனர் இன்னொரு சாரர். எப்படியோ, பல்லாயிரம் கோடி ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் இப்பூமியில் நாமும் வாழ்கிறோம் என்பதில் நமக்குப் பெருமையே. இவ்வளவு பழமையிலும் பழமையான பூமியில், 100 ஆண்டுகள் என்பது துளியிலும் சிறிய அளவுதான். ஆனபோதிலும், ஒவ்வொரு நொடியும் சேர்ந்தே நிமிடங்களும், பல நிமிடங்கள் சேர்ந்தே ஒரு மணி நேரமும் உருவாவதைப் போலவே, காலத்தின் ஒவ்வொரு பொழுதும் முக்கியத்துவம் வாய்ந்ததே. எப்போதும் முன்னோக்கியே ஓடும் காலச் சக்கரத்தின் ஆரக்கால்களாய் இருக்கும் பல்வகையான சமூக – இலக்கிய – பொருளாதார நிகழ்வுகளை நாம் ஒரு கணமேனும் திரும்பிப் பார்ப்பதும், அவற்றைப் பற்றிய மலரும் நினைவுகளை மெல்ல எண்ணிப் பார்ப்பதும் அவசியம். பல நூற்றாண்டுகளின் ஆண்டாக அறியப்படும் இந்த 2016-ஆம் ஆண்டுதான், தமிழ் ஹைக்கூ கவிதைகளின் நூற்றாண்டாகவும் இருப்பது இயல்பான ஒற்றுமையாக அமைந்துள்ளது. தமிழில் முதல் ஹைக்கூ கவிதை நூல் 1984 ஆகஸ்டில்
(ஓவியக்கவிஞர் அமுதபாரதி எழுதிய ‘புள்ளிப் பூக்கள்’) வெளிவந்தது. அப்படியிருக்க, இந்த ஆண்டு எப்படி தமிழ் ஹைக்கூவின் நூற்றாண்டாக இருக்க முடியும்..? நல்ல கேள்விதான். தமிழின் முதல் ஹைக்கூ நூல் 1984-இல் வெளிவந்திருந்தாலும், 1916-ஆம் ஆண்டிலேயே தமிழில் ஜப்பானிய ஹைக்கூ பற்றிய முதல் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இந்தக் கவிதை வடிவத்தை முதலில் அறிமுகம் செய்த பெருமை மகாகவி பாரதியையேச் சாரும்.
16.10.1916 –இல் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் ’ஜப்பானிய கவிதை’ எனும் தலைப்பிட்டு, பாரதியார் எழுதிய கட்டுரை தான் முதல் அறிமுகக் கட்டுரை. அந்தக் கட்டுரையில் பாரதியார் பினவருமாறு குறிப்பிடுகிறார்;
“இங்கிலாந்து,அமெரிக்கா என்ற தேசங்களிலுள்ள இங்கிலீஷ் கவிதையைக் காட்டிலும்,ஜப்பானியக் கவிதை சிறந்தது. காரணமென்ன?  மேற்குக்  கவிதையில் சொல் மிகுதி. எண்ணத்தை அப்படியே வீண்சேர்க்கை யில்லாமல் சொல்லும் வழக்கம் ஐரோப்பியக் கவிதையிலே இல்லை.
ஜப்பானில் அப்படியில்லை. வேண்டாத சொல் ஒன்று கூடச்
சேர்ப்பது கிடையாது. கூடை கூடையாகப் பாட்டெழுதி அச்சிட
வேண்டும் என்று ஒரே ஆவலுடன் எப்பொழுதும் துடித்துக்
கொண்டிருப்பவன் புலவனாக மாட்டான். கவிதையெழுதுபவன்
கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையை கவிதையாக செய்தோன் அவனே கவி.
புலவனுக்கு பணம் ஒரு பொருளன்று. வானத்து மீன்,
தனிமை, மோனம், மலர்களின் பேச்சு…இவற்றிலே ஈடுபட்டுப்
போய் இயற்கையுடன் ஒன்றாக வாழ்பவனே கவி.” பாரதியார் இப்படி எழுதியதோடு நில்லாமல், ஹைக்கூ கவிதையொன்றையும் மேற்கோளாகச் சுட்டியுள்ளார்.
வாஷோ மத்ஸுவோ என்கிற ஜப்பானியக் கவிஞரின் மாணவர்களுள் ஒருவர் ஹொகுஷி .இந்த மாணவரின் வீடு தீப்பற்றி எரிந்துபோய்விட்டது. அதனை தனது குருவுக்கு பாட்டாக எழுதி அனுப்பினார்.
’தீப்பட்டெரிந்தது;
வீழும் மலரின் அமைதி என்னே!’ – இதுதான் அந்தப் பாடல். இந்த சிறு கவிதை இழப்பின் வலியை விடவும், அதனை மலரின் அமைதியால் வென்றுவிடத் துடிக்கும் மனித நுண்உணர்வை வெகு நேர்த்தியாய் பதிவு செய்துள்ளது.
பாரதியின் இக்கட்டுரை வெளியான 50 ஆண்டுகளில், ஹைக்கூ கவிதை பற்றிய வேறு பதிவுகளும் தமிழில் கிடைக்கவில்லை. 1966 ஜனவரியில் ‘கணையாழி’யில் எழுத்தாளர் சுஜாதா ஆங்கில வழி மொழிபெயர்த்த சில ஹைக்கூ கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. ‘தீபம்’ இதழில் கவிஞர் தமிழ்நாடன் ‘ஜப்பானிய ஹைக்கூ’ குறித்த கட்டுரையொன்றினை எழுதியுள்ளார். 1966 அக்டோபர் ‘நடை’ இதழில் கவிஞர் சி.மணி (பழனிச்சாமி) சில ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.
1970-களில் தான் முதன்முதலில் மொழிபெயர்ப்பில்லாத நேரடியான தமிழ் ஹைக்கூ கவிதைகள் எழுதப்பட்டன. இதனை எழுதியவர் கவிக்கோ அப்துல்ரகுமான். ஹைக்கூ என்ற பெயரில் இல்லாமல், ‘சிந்தர்’ எனும் தலைப்பிட்டு எழுதியுள்ளார். அந்தக் கவிதைகள் ‘பால்வீதி’ (1974) எனும் அவரது நூலிலும் வெளியாகியுள்ளன. அதுமட்டுமில்லாமல், ’ஜூனியர் விகடன்’ (1984-85) இதழ்களில் அப்துல்ரகுமான் எழுதிய ஹைக்கூ குறித்த அறிமுகக் கட்டுரைகள் வெகுஜன தளத்தில் மிகுந்த கவனிப்பைப் பெற்றன.
ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்து முனைவர் தி.லீலாவதி ’ஜப்பானிய ஹைகூ’ (1987- அன்னம் வெளியீடு) எனும் நூலாக்கினார். கவிஞர்கள் மித்ரா (ஹைகூ கவிதைகள் – 1990), அறிவுமதி (புல்லின் நுனியில் பனித்துளி -1984), அமுதபாரதி (காற்றின் கைகள் – 1987), ஈரோடு தமிழன்பன் (சூரியப் பிறைகள் – 1985) ஆகியோரின் தமிழ் ஹைக்கூ கவிதை நூல்கள் வெளிவந்தன. இந்த நூல்களைப் படித்த பலரும் ஹைக்கூ கவிதையின் வாசகர் ஆனார்கள். பல வளரும் கவிஞர்களும் உத்வேகம் பெற்று, ஹைக்கூ கவிதைகள் எழுதும் முயற்சியிலும் ஈடுபட்டனர். 1990-களின் இறுதியும், 21-ஆம் நூற்றாண்டின் தொடக்கமும் தமிழில் ஹைக்கூ கவிதை நூல்களின் வரவிற்கு அகலமாய் கதவுகளைத் திறந்தன. ஆண்டிற்கு சராசரியாக 20-க்கும் மேற்பட்ட ஹைக்கூ நூல்கள் வெளிவந்தன.
ஹைக்கூ எழுதப்பட்ட ஆரம்ப காலத்திலேயே, ஹைக்கூ கவிதைகள் பற்றிய வாதப்பிரதி வாதங்களும் தொடங்கி விட்டன. ’சிந்தர், அம்மானை, குறள் வெண்பா, ஆத்திச்சூடி போன்ற கவிதை வடிவங்கள் தமிழில் இருக்கையில், ஜப்பானிய கவிதை வடிவம் எதற்கு..?’ “தமிழில் ஹைக்கூ எழுதுவதென்பது அடுத்தவன் செருப்பை தலையில் வைத்துக்கொண்டு ஆடுவது போன்றது..!’ இப்படியாய் பலரும் கருத்துகளைக் கூறி வந்தார்கள். இப்படி கருத்துரைத்த நீதிபதிகள் பலரும் ஹைக்கூவின் வடிவம் பற்றி மட்டுமே கருத்துக் கூறினார்களேயொழிய, அதன் உள்ளடக்கம் பற்றி எதுவும் சொல்லாமலே விட்டுவிட்டார்கள். அவர்கள் ஹைக்கூ கவிதை நூல்கள் எதையும் முழுமையாய் வாசிக்காமலேயே அவ்வாறு கூறினார்கள் என்கிற உண்மை இதிலிருந்து புலப்படுகிறது. ஜப்பானில், 5-7-5 எனும் 17 அசைகளில் எழுதப்பட்ட மரபுக் கவிதை தான் ஹைக்கூ. என்றாலும், தமிழில் ஹைக்கூ மரபுக் கவிதையாய் எழுதப்படவில்லை. தன் கவிதை மூலமாக எல்லாவற்றையும் விளக்கிச் சொல்லிக் கொண்டிருப்பது ஹைக்கூ கவிஞனின் வேலையல்ல; தான் கண்ட ஒரு காட்சியைக் காட்டுவதுடன் ஹைக்கூவின் வேலை முடிந்துவிடுகிறது. அந்தக் கவிதை காட்டும் காட்சியை மனதில் வரைந்து கொள்வதும், அது உணர்த்தும் அர்த்தங்களை தனது வாசிப்பு அனுபவத்தின் வழியாக விளங்கிக்கொள்ள வேண்டியதும் வாசகனின் வேலை. ஹைக்கூ கவிஞன் கவிதையின் ஒரு கதவைத் திறக்க, மற்றொரு கதவைத் திறப்பது வாசகனின் வேலையாகும். இதனால், ஹைக்கூவில் வாசகனும் கூட்டுப் படைப்பாளியாய் சங்கமிக்கின்றான். இந்த அனுபவத்தைத தமிழின் கவிதை வடிவங்கள் எதுவும் தராத நிலையில், தமிழ்க் கவிஞர்கள் பலரும் ஹைக்கூ எழுத முயன்றனர். இந்த முயற்சியில் மூத்த, இளைய கவிஞர்கள் பலரும் வெற்றி கண்டனர். முயன்று முடியாமல் போன சிலரும், ‘இந்தப் பழம் புளிக்கும்..!’ என்பதாய், ‘தமிழில் ஹைக்கூவே கிடையாது; எல்லாமே பொய்க்கூ..!’ என்று இன்னமும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். தமிழில் எழுதப்படும் ஹைக்கூ கவிதைகள் கீழுள்ளவற்றை தனது உள்ளீடாகக் கொண்டு எழுதப்படுகின்றன.
0 நேரடியான காட்சி அனுபவம்.
0 மூன்றடியில் சுண்டக் காய்ச்சிய இறுகிய மொழிநடை.
0 மூன்றாவது வரி மின்அதிர்வு.
தமிழில் எழுதப்படுகிற அனைத்து ஹைக்கூ கவிதைகளும் இதனை முற்றிலுமாய் உள்வாங்கி எழுதப்படுவதாய் இல்லை என்றாலும், பெரும்பான்மையான கவிதைகளில் இம்மூன்று கூறுகளும் வெளிப்படவே செய்கின்றன.
‘கவிதை புறமனம் தீட்டும் ஓவியம்
ஹைக்கூ அடிமனதின் வெடிப்பு’ என்பார் தமிழ்நாடன்.
ஹைக்கூ கவிதைகள் மனித வாழ்வின் நேரடியான அனுபவத்தை, அப்படியே அதன் உயிர்ப்போடு காட்சியாய் (எதையும் வலிந்து சேர்க்காமல்) பதிவு செய்வதில் வெற்றியடைகின்றன. தமிழில் புதுத்தடம் பதித்து வரும் ஹைக்கூ கவிதை பல இளைய கவிஞர்களையும் ஆர்வத்தோடு எழுதத் தூண்டுகின்றன. பல இளைய கவிஞர்களின் முதல் கவிதை நூலாய் ஹைக்கூ கவிதை நூல்களே வெளியாகி வருவதிலிருந்து இதனை அறிந்துகொள்ள முடிகிறது.
இளைய கவிஞர்கள் மட்டுமின்றி, தமிழின் முன்னோடி கவிஞர்களும் ஹைக்கூ கவிதை எழுதுவதோடு, அதனை அடுத்த தலைமுறையினரிடம் முறையாக கொண்டு சேர்க்கும் வகையில், தெளிவான அறிமுகத்தையும் செய்து வருகிறார்கள். இதில், முன்னோடியாக இருப்பவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன். 1985-ஆம் ஆண்டிலேயே தனது ‘சூரியப் பிறைகள்’ எனும் ஹைக்கூ கவிதை நூலை, கவிஞரே வரைந்த ஓவியத்தோடு வெளியிட்டவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன். மேலும், ஹைக்கூவோடு மட்டுமில்லாமல், சென்டிரியு, லிமரைக்கூ, லிமரிக் சென்ட்ரியு என ஹைக்கூவின் அடுத்தடுத்த வடிவங்களையும் அறிமுகம் செய்து வைத்தார். ஆரம்ப காலத்தில் வெகுசன இதழ்கள் ஹைக்கூ கவிதைகளைக் கண்டுகொள்ளவேயில்லை. சிற்றிதழ்கள் தான் தமிழில் ஹைக்கூ பற்றிய மொழிபெயர்ப்புகளை வெளியிட்டு, இலக்கியவாதிகளின் கவனிப்புக்கு உள்ளாக்கின. பிறகு, ஹைக்கூ கவிதைகள் பரவலான கவனிப்பையும் வரவேற்பையும் பெற்றதும், அனைத்து இதழ்களும் ஹைக்கூ கவிதைகளையும் கட்டுரைகளையும் வெளியிடத் தொடங்கின. மூத்த கவிஞர்கள் பழனி இளங்கம்பன், அரிமதி தென்னகன், ஆலந்தூர் கோ.மோகனரங்கன், கு.மோகனராசு, நிர்மலா சுரேஷ், எ.மு.ராசன், இராசாமணி (எ) எழிலரசு, கருமலை பழம் நீ, வேலணையூர் பொன்னண்ணா உள்ளிட்டவர்களும் ஹைக்கூ எழுதி, அதனை நூலாகவும் வெளியிட்டுள்ளனர். கவிஞர்கள் மட்டுமல்ல; எஸ்.சங்கரநாராயணன், உதயசங்கர் போன்ற சிறுகதை எழுத்தாளர்களும், இரா.காளீஸ்வரன் போன்ற நாடகவியலாளர்களும் ஹைக்கூ எழுதியதோடு, அதனை நூலாகவும் தந்து பெருமை சேர்த்துள்ளனர்.
மேலும், புதுச்சேரியிலிருந்து 1988 ஜனவரியில் ‘கரந்தடி’ எனும் முதல் ஹைக்கூ இதழ் (ஆசிரியர்: சீனு.தமிழ்மணி) வெளிவந்தது. ’கணையாழி’ இதழ் (1991–மார்ச்) முதல்முதலாக ஹைக்கூ கவிதைக்கென சிறப்பிதழ் வெளியிட்டது. அதில், எழுத்தாளர் மாலன் எழுதியிருக்கும் கட்டுரையொன்றில், ”வார்த்தைகளே கவிதை. போதனை செய்வதே கவிதை. புலம்புவதே கவிதை. புரியாமல் புதிராக எழுதுவதே கவிதை என்று தத்தளித்துக் கொண்டிருக்கும் தமிழ்க் கவிதையில் ஹைக்கூ ஒரு ஒழுங்கைக் கொண்டு வரக்கூடும்…”என்று எழுதியிருந்தார். அவரின் நம்பிக்கை பொய்க்காமல், இன்றைக்கு தமிழ் ஹைக்கூ, தமிழ்க் கவிதைக்கு ஒரு செறிவையும்,ஒழுங்கையும் தமிழ்க் கவிதைக்குத் தந்திருக்கிறது.
உலக மொழிகளில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட நூலாக இரு நூல்களைச் சொல்வார்கள். ஒன்று பைபிள். மற்றொன்று திருக்குறள். பைபிள் ஒரு மத நூல். திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல். இலக்கிய வடிவங்களிலேயே இன்றைக்கு உலகெங்கிலும் பரவியிருக்கும் ஒரு வடிவமாக ஹைக்கூ மட்டுமே திகழ்கிறது. அதிலும், இந்திய மொழிகளிலேயே தமிழில் மட்டும்தான் ஹைக்கூ கவிதை நூல்களும், ஹைக்கூ தொடர்பான கட்டுரை நூல்களும் கூடுதலாக வெளிவந்திருக்கின்றன. தமிழின் முதல் நூல் வெளியாகி, 32 ஆண்டுகள் ஆண்டுகள் கடந்தோடிவிட்ட இச்சூழலில், இதுவரை (டிசம்பர்-2016) சுமார் 380 ஹைக்கூ நூல்களும், 50—க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு மற்றும் கட்டுரை நூல்களும் வெளிவந்துள்ளன. சிறு சிறு தடைகளைக் கடந்து, நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் இந்த கவிதை நீரோட்டத்தில் நாமும் ஒரு நீரள்ளி தாகம் தணிப்போமா..! ‘இரவெல்லாம் உன் நினைவுகள் கொசுக்கள்.’ – என்கிற அப்துல்ரகுமானின் ஹைக்கூ கவிதை, முதல் வாசிப்பில் சாதாரணமான கவிதை போல் தோன்றினாலும், யோசிக்க யோசிக்க புதுப்புது அர்த்தங்களைச் சுரப்பதாய் உள்ளது.
‘பயம் ஊர்ந்து கொண்டிருக்கும் – இது பாம்பு போன தடம்.’ வாசித்து முடித்த பின்னும், நமக்குள் ஊர்ந்து கொண்டேயிருக்கும் ஒரு பாம்பின் சித்திரத்தை இந்த ஹைக்கூ நம் மனசில் வரைந்து போகிறது. தமிழ் ஹைக்கூ பற்றி மாறுபட்ட கருத்தினைக் கொண்டிருந்தாலும், இந்த தமிழ் ஹைக்கூ நூற்றாண்டுக் கட்டுரையை மூத்த கவிஞர் சிற்பியின் ஹைக்கூ கவிதையோடு முடிப்பது எவ்வளவு பொருத்தமானது..! ‘ஓவியன் விரல்களை முத்தமிட்ட போது உதடுகளில் வானவில்.” ( கண்ணாடிச் சிறகுள்ள ஒரு பறவை- பக்:92)

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply