home சமீபத்திய பதிவுகள் தமிழ் சிறுகதை நூற்றாண்டு!

தமிழ் சிறுகதை நூற்றாண்டு!

 

19  ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அமெரிக்கா,பிரான்ஸ்,ரஷியா போன்ற நாடுகளில் சிறுகதை இலக்கியம் வளர்ந்தபோதிலும், இந்தியாவில், தமிழ்நாட்டில், சிறுகதை என்று சொன்னால், அது வ.வே.சு.அய்யரின் ” குளத்தங்கரை அரசமரம் ” கதையைத்தான் சொல்ல முடியும். 1917  இல் அவரது ” மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் ” என்ற தொகுப்பில் இந்தக் கதை இடம் பெற்றுள்ளது. அதற்கு முன்பே தமிழில் வீரமாமுனிவரின் பரமார்த்த குருகதைகள், பாரதியாரின் ” ஆறில் ஒரு பங்கு ” என்றொரு சிறுகதை, செல்வகேசவ ராய முதலியாரின் அபிநவக் கதைகள், வீராச்சாமி செட்டியாரின் வினோத ரசமஞ்சரி போன்றவை எல்லாம் இருந்தபோதிலும், சிறுகதை என்ற இலக்கணத்தில் பொருந்தி வரக்கூடிய கதை என்று பார்க்கும்போது, வ.வே.சு.அய்யரின் குளத்தங்கரை அரசமரம் கதை தான் வருகிறது.

குளத்தங்கரையில் இருக்கும் அரச மரம், ருக்மணி என்ற அபலைப்பெண்ணின் துயரக்கதையை தானே சொல்லும். ருக்மணி என்ற அழகான பெண் சிறுவயது முதலே அந்த குழந்தைங்கரைக்கு வருவாள். பூப்பறிப்பாள்.  அவளுக்கு திருமணம் ஆகும். சில காலம் கழித்து, ருக்மணியின் வசதியான அப்பா நொடித்துப் போய்விடுவார். அந்தக்காலத்தில், வெள்ளைக்காரன் வங்கியான அர்ப்பதுநாடு வங்கியில் பணம் போட்டு, அந்த வங்கி திவாலாகி போய், அவரது சொத்து எல்லாம் போய் விடும். ருக்மணியின் மாமனார் மாமியார் தங்களின் மகன் நாகராஜனுக்கு வேறொரு வசதியான பொண்ணை திருமணம் செய்ய முடிவு செய்வார்கள். நாகராஜனுக்கு இதில் சம்மதம் இல்லாவிடினும், திருமணம் நடக்கும் நாளில், மறுத்து விடுவோம் என்று மனதில் நினைத்து இருப்பான். முதல் நாள் இரவு, குளத்தங்கரையில் தற்செயலாய், ருக்மணி தனது கணவன் நாகராஜனை சந்தித்து பேசுவாள். அவன் அவளை தேறுதல் சொன்னாலும், தான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்பதை வெளிப்படையாய் சொல்லாமல் இருந்து விடுவான். அவள் அன்று இரவு குளத்தில் குதித்து உயிரை மாய்த்து கொள்வாள். கணவன் நாகராஜன் அழுது புலம்பியபடி சந்நியாசம் போய்விடுவான். இது தான் கதை.

” என் அருமைக் குழந்தைகளே! பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது இனிமேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்கவேண்டாம்.”
என்று கதையை முடித்திருப்பார்.

இந்தக் கதையில், ஒரு வரலாற்று சம்பவம் இடம் பெற்றிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அர்ப்பதுநாடு வங்கி திவாலாகிப் போன விஷயத்தையும் அதில் பணம் போட்ட ருக்மணியின் அப்பா, பணத்தை இழந்து ஏழையாகிப் போனார் என்றும் வருகிறது. அக்காலத்தில், திருநெல்வேலியில் இருந்த அர்ப்பதுநாடு வங்கியில் பணம் போட்ட பலரும் பணத்தை இழந்தனர். சிலர் தற்கொலை செய்துகொண்டனர்.  பணத்தை இழந்த சிலருக்கு பைத்தியம் பிடித்து விட்டது. வ.உ.சி.,சுப்ரமணிய சிவா, பாரதி போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள் கூட சுதேசி இயக்கத்திற்காக மக்களிடம் இருந்து பெற்ற பணத்தை இந்த வங்கியில் போட்டு, பணத்தை இழந்தனர் என்பதும், பின்னர் நாட்டுக்கோட்டை செட்டியார்கள்,கல்லிடைக்குறிச்சி ஐயர்கள் போன்றோரின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் சுதேசி வங்கி ஆரம்பிக்க வலியுறுத்தி, அப்படி உருவான வங்கிதான், தற்போதைய இந்தியன் வங்கி என்பதும் வரலாறு.

வ.வே.சு.அய்யரை தொடர்ந்து, ராஜாஜி, கல்கி போன்றோர் மதுவிலக்கு,தீண்டாமை போன்றவற்றை வலியுறுத்தும் சிறுகதைகளை எழுதினர்.  கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய சிறுகதைகளில் குறிப்பிடத்தக்கவை என ஒற்றை ரோஜா, வீணை பவானி,  கணையாழியின் கனவு, அமர வாழ்வு போன்றவற்றை சொல்லலாம்.
இவரது கதைகளில் தானே கதையை கூறி செல்வது போல எழுதுவார்.

தமிழ் சிறுகதையின் அல்லது தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்காலம் என்று மணிக்கொடி காலத்தை குறிப்பிடலாம். 1937  இல், துவக்கப்பட்ட மணிக்கொடி இதழ், தாயின் மணிக்கொடி என்ற வரிகளில் இருந்து பிறந்தது. இந்த இதழின் ஆசிரியர் பாரதியின் சீடரான வ.ரா. மணிக்கொடி யுகம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இந்த இதழின் தாக்கம் இருந்தது. தமிழ் சிறுகதை இலக்கியத்தின் பிதாமகன் புதுமைப்பித்தன், பி.எஸ்.ராமையா, கு.ப.ராஜகோபாலன்,ந.பிச்சமூர்த்தி,கு.சீனிவாசன்,சிட்டி, சிதம்பர சுப்ரமணியன்,மௌனி,சி.சு.செல்லப்பா, பி.எம்.கண்ணன், க.நா.சுப்ரமணியன் போன்றோர் மணிக்கொடியில் சிறுகதைகளை எழுதினர். 1939  இல், மணிக்கொடிக்காலம் முடிவுற்றது என்றாலும், தமிழ் சிறுகதைக்கு அதன் பங்களிப்பு கணிசமானது என்று சொல்லலாம்.

புதுமைப்பித்தன் : சொ.விருத்தாச்சலம் என்ற இயற்பெயரைக் கொண்ட புதுமைப்பித்தன் நெல்லைவாசி. இவரது எள்ளல்நடை இவரது சிறுகதைகளில் உள்ள சிறப்பு. சிறுகதை இலக்கியத்தில், பல்வேறு பரிசோதனை முயற்சிகளை செய்து பார்த்தவர்.  ” சிறுகதை என்பது அரைமணி முதல் ஒரு மணிக்குள் படித்து முடிக்கக்கூடிய அளவுள்ள உரைநடையில் அமைந்துள்ள கதை ” என்று விளக்கமளித்த எட்கர் ஆலன்போ, பிரான்ஸ் நாட்டின் பால்சாக்,மாப்பஸான், அமெரிக்காவின் நத்தானியேல் ஹாதோன், ஓ ஹென்றி போன்றோரின் கதைகளை உள்வாங்கிக்கொண்டு, தமிழ் இலக்கிய மரபுகளை தனது சிறுகதைகளில் புகுத்தி வெற்றிகரமாக எழுதியவர் இவர்.
இவரது ” கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் ” , ” அகல்யை “, ” விநாயக சதுர்த்தி “, மற்றும் காலனும், கிழவியும், சங்குத்தேவன் தர்மம் போன்ற சிறுகதைகள் சிகரம் தொட்ட உலக தரத்திலான சிறுகதைகள் என்று சொல்ல முடியும்.

கு.ப.ராஜகோபாலன் :  பெண்ணின் உளவியலை இவரது கதைகளில் தரிசிக்கலாம். மனித உணர்வுகளை மிக நுட்பமாக சித்தரிப்பதில் இவரது எழுத்துக்கு நிகரில்லை. இவரது ” விடியுமா ?” என்ற சிறுகதை அக்காலத்தில் பரவலான வரவேற்பை பெற்ற கதை. சிறுகதை தளத்தில் புதிய உத்தி என்று சொல்லலாம். இவரது சிறிது வெளிச்சம், கனகாம்பரம், காணாமலே காதல் போன்ற சிறுகதை தொகுப்புக்கள் மிக முக்கியமானவை.

ந.பிச்சமூர்த்தி : மணிக்கொடி எழுத்தாளரான இவர் எழுதிய கதைகளுள், மோகினி, ஜம்பரும் வேஷ்டியும், மாங்காய் தலை, பதினெட்டாம் பேருக்கு போன்றவை சிறப்பானவை.

சி.சு.செல்லப்பா :  எழுத்து என்ற சிற்றிதழின் ஆசிரியர். சரசாவின் பொம்மை, மணல்வீடு, சதியாக்கிரகி போன்ற சிறுகதை தொகுதிகளை எழுதியவர். இவரது எழுத்து தனித்தன்மை வாய்ந்தது. இவரது ” என் சிறுகதைப்பாணி ” என்ற நூல் குறிப்பிடத்தக்க ஒன்று. இவர் சுமார் 108  கதைகள் எழுதியுள்ளார்.

மௌனி :  தஞ்சை மாவட்ட எழுத்தாளரான மௌனி என்ற சுப்ரமணியன் எழுதிய சிறுகதைகள் மொத்தமே முப்பதுக்கும் குறைவு. வாழ்வின் நிச்சயமின்மை, மனித வாழ்வின் அதிருப்தி,மரணம் போன்றவற்றை பேசும் இவரது சிறுகதைகளில் அழியாச்சுடர், ஏன் போன்றவை முக்கியமானவை. உளவியல் தளத்தில் எழுதப்பட்ட இவரது சிறுகதைகளை படித்த புதுமைப்பித்தன் , இவரை சிறுகதை இலக்கியத்தின் திருமூலர் என்று குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

இதே காலகட்டத்தில் எழுதிய பி.எஸ்.ராமையா, சிட்டி, க.நா.சு. போன்றோரும் பல சிறுகதைகளை எழுதியுள்ளனர்.

கு.அழகிரிசாமி : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தை சேர்ந்த எழுத்தாளர் கு.அழகிரிசாமி எழுதிய சிறுகதைகளில் அன்பளிப்பு, தெய்வம் பிறந்தது, ஞாபகார்த்தம், அழகம்மாள், இரண்டு பெண்கள் போன்றவை சிறப்பானவை. தமிழில் சிறுகதை இலக்கியத்திற்காக மத்திய அரசின் சாகித்ய அகாடெமி பரிசு பெற்ற முதல் எழுத்தாளர் இவரே. சாமானிய மனிதர்களை – அவர்களின் பரிசுத்தமான அன்பை – இவரது கதைகளில் பார்க்கலாம்.

வி.கோவிந்தன் என்ற விந்தன்,  சாந்தி இதழை நடத்திய தொ.மு.சி.ரகுநாதன், கி.வா.ஜெகந்நாதன் போன்றோரும் இதே காலத்தில் பல சிறந்த சிறுகதைகளை எழுதியுள்ளனர்.  கிராம ஊழியன் மற்றும் மணிக்கொடி இதழில் எழுதிய மற்றொரு குறிப்பிடத்தக்க எழுத்தாளர் தி.ஜானகிராமன்.  இவரது கதைகளில், கொட்டு மேளம், பிடி கருணை போன்றவை சிறப்பானவை.

நா.பார்த்தசாரதி :  தீபம் இதழின் ஆசிரியர். சமூகத்தின் போலித்தனங்களை தோலுரித்து காட்டிய எழுத்தாளர்.  கங்கை இன்னும் வற்றி விடவில்லை என்ற இவரது சிறுகதை தொகுப்பு குறிப்பிடத்தக்கது.

ஜெயகாந்தன் :  தமிழ் சிறுகதை உலகில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் இவர் என்று சொல்லலாம். பாரதியையும், புதுமைப்பித்தனையும் உள்வாங்கிக்கொண்டு எழுதியவர்.  இவரது ” அக்கினி பிரவேசம் ” சிறுகதை அக்காலத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய படைப்பு. இப்போதும் கூட அது ஒரு புதுமைப்படைப்பு என்றே சொல்லலாம். பாலியல் கொடுமைக்கு ஆளான ஒரு கல்லூரி மாணவியின் கதை இது. மனம் விரும்பாமல் நடந்த நிகழ்விற்கு ஒரு பெண் குற்றவாளியல்ல என்று சொல்லி அவளின் தாய் அவளை ஒரு வாளி தண்ணீரை தலையில் ஊற்றி அவள் களங்கத்தை துடைப்பதாக எழுதி இருப்பார். இவரது இந்த கதைக்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது.  இவரது யுகசந்தி, ஒரு பிடி சோறு, இனிப்பும் கரிப்பும், உண்மை சுடும் போன்ற சிறுகதை தொகுப்புக்கள் மிக முக்கியமானவை.

கி.ராஜநாராயணன் : கரிசல் வட்டாரத்தின் மிக முக்கிய படைப்பாளி இவர். இவரது ” கதவு ” சிறுகதை அரசு எந்திரத்தின் கோரமுகத்தை வெளிப்படுத்தும் கதை. எளிய கிராமத்து மனிதர்களின் அவலங்களை இவரது வேட்டி, கன்னிமை, கொத்தைபருத்தி போன்ற கதைகள் சொல்லும்.

அப்பாவின் சிநேகிதர் எழுதிய அசோகமித்திரன் மற்றொரு மிக முக்கிய சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர்களோடு, லா.ச.ரா, கரிச்சான்குஞ்சு , எம்.வி.வெங்கட்ராம் போன்ற எழுத்தாளர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.

அறுபதுகளின் இறுதியில், வண்ணதாசன்,வண்ணநிலவன், நாஞ்சில் நாடன்,பா.செயப்பிரகாசம், பொன்னீலன், அம்பை , கந்தர்வன், மேலாண்மை பொன்னுச்சாமி, ஆ.மாதவன் போன்றோர் எழுத துவங்கினர். இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடெமி விருது பெற்ற வண்ணதாசன் எழுதிய ” கலைக்க முடியாத ஒப்பனைகள் ”  சிறுகதை தொகுப்பு மிக முக்கியமான தொகுப்பு. அவர் 150  க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.

தற்போது, கோணங்கி, உதயசங்கர், சுப்ரபாரதிமணியன், பாவண்ணன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பெருமாள்முருகன், எஸ்.சங்கரநாராயணன், இமையம்,சுரேஷ்குமார் இந்திரஜித், சோ.தர்மன், பாஸ்கர்சக்தி, பாமா, லட்சுமி சரவணகுமார்  போன்றோரும் சிறந்த சிறுகதைகளை எழுதி வருகிறார்கள்.

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply