home நிகழ்வாழ்வு உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ. 25 இலட்சம் இழப்பீடு – சீமான்!

உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ. 25 இலட்சம் இழப்பீடு – சீமான்!

விவசாயிகளின் ஒட்டுமொத்தக் கடன்களையும் அரசே ஏற்க வேண்டும் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ. 25 இலட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
——————————————
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழர்களின் பாரம்பரிய உரிமையான காவிரி நதிநீர் உரிமையானது கர்நாடகத்தின் பிடிவாதத்தாலும், மத்தியில் ஆளும் மோடி அரசின் நயவஞ்சகத்தாலும் மறுக்கப்பட்டதன் விளைவாக பாசனத்திற்கு நீரின்றி தான் விளைவித்த நெற்பயிர்கள் கண்முன்னே கருகக்கண்டு ஆழ்ந்த மனத்துயருற்ற விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிற செய்தி உள்ளத்தில் உதிரத்தை வரவழைக்கிறது. இவ்வாண்டு குறுவை, சம்பா என இரு பருவமும் முழுதாகப் பாதிக்கப்பட்டதாலும், கடன்வாங்கி செய்த விவசாயம் முற்று முழுதாக நலிவடைந்ததாலும் கையறுநிலைக்குத் தள்ளப்பட்ட விவசாயிகள் தற்கொலை எனும் தவறாகப் பாதையைத் தேர்ந்தெடுத்து 80க்கும் மேற்பட்ட விவசாயிகள் இம்மாதத்தில் மட்டும் பலியாகியிருக்கிறார்கள். இதனை வெறுமனே தற்கொலை என்று நம்மால் கடந்து செல்ல முடியாது. ஆளும் வர்க்கங்கள் தனது அலட்சியப் போக்கினாலும், அக்கறையற்ற ஆட்சிமுறையினாலும் செய்த படுகொலை என்றுதான் பார்க்க வேண்டும். ஒரு விவசாயினுடைய மரணம் என்பது அது ஒரு செய்தியல்ல! பட்டினிச்சாவை எதிர்க்க நோக்கப் போகும் ஒரு நாட்டிற்கான முன்னெச்சரிக்கை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
உலகில் எத்தொழிலுக்கும் முன்னோடித் தொழில் உழவென வள்ளுவப்பெரும்பாட்டன் உரைக்கிறான். ‘உழவுக்கு வந்தனை செய்வோம்’ என பெரும்புலவன் பாரதி போற்றுகிறான். அப்பேர்பட்ட விவசாயிகளைத்தான் நாள்தோறும் பலிகொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த மரணங்களை விவசாயத் தற்கொலையாகக் கூட பதிவுசெய்ய மனமில்லாது மௌனம் சாதிக்கிறது அதிமுக அரசு.
வெயிலென்றும், மழையென்றும் பாராது நித்தமும் நிலத்தில் உழைத்து பயிரிட்ட நெல்மணிகளை அறுவடை செய்து சூரியனுக்குப் படையிலிட்டு பிறருக்கும் கொடுத்து மகிழும் தைத்திருநாளாம் பொங்கல் நெருங்கிவரும் வேளையில் நிகழ்ந்தேறி வரும் விவசாயிகளின் தொடர் மரணங்கள் ஆட்சிமுறையின் கோரமுகத்தை வெளிப்படுத்துகிறது. அதுவும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பு போராடச் சென்ற விவசாயி ஒருவர் மாரடைப்பால் இறந்துபோனது பெருத்தத் துயரச்செய்தியாகும். விவசாயிகள் தங்களை மாய்த்துக் கொள்வதற்கு தாங்கள் வாங்கியக் கடன்கள்தான் முதன்மை பங்கு வகிக்கிறது. எனவே. விவசாயப் பெருங்குடி மக்கள் கூட்டுறவு வங்கிகளிலும், நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளிலும் வாங்கியக் கடன்களை அரசே ஏற்று செலுத்த மவேண்டும். மேலும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா 25 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இத்துடன் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
(06-01-2017)
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Leave a Reply